அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் புதுச்சேரி அரசு அனுமதி வழங்காததை தொடர்ந்து, புதுச்சேரி கடலில் 4 மணி நேரம் முகாமிட்டு இருந்த கோர்டிலியா குரூஸ் கப்பல் திரும்பி சென்றது. கோர்டிலியா குரூஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடல்வழி மார்க்கமாக சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரி இடையே இயங்கும் இந்த தனியார் சொகுசு கப்பலை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார். பயணத்தின் ஒரு பகுதியாக, சொகுசு கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுக பகுதிக்கு வந்ததும், சிறிய படகுகள் மூலம் பயணிகளை இறக்கி, புதுச்சேரியை சுற்றி பார்க்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். பின், புதுச்சேரியில் இருந்து மீண்டும் சென்னைக்கு கப்பல் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சொகுசு கப்பலில் சூதாட்ட கேசினோ விடுதி இருப்பதால் கப்பலை புதுச்சேரி பகுதிக்குள் அனுமதிக்க கூடாது என அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், சொகுசு கப்பல் புதுச்சேரி கடலில் நிற்பதற்கு அரசு அனுமதி தந்துள்ளதா, அப்படி அனுமதி தந்திருந்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு கவர்னர் தமிழிசை, கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு தன்னிடம் வரவில்லை; அப்படியே கப்பல் வந்தாலும் கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது என, கூறினார். இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி கடல் எல்லை பகுதிக்குள் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் வந்தது.
புதுச்சேரி கடலில் நின்ற சொகுசு கப்பலை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காததால், புதுச்சேரி கடல் பகுதியில் 4 மணி நேரம் முகாமிட்டு இருந்த கப்பல், காலை 8:30 மணியளவில் புறப்பட்டு சென்றது. சொகுசு கப்பலுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் கடற்கரை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து துறைமுக அதிகாரிகள் கூறும்போது, ‘சொகுசு கப்பல் பயணிகளை உப்பளம் துறைமுகத்தில் இறக்கி நகருக்குள் அழைத்து செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. புதுச்சேரி அரசு இதுவரை அனுமதி தரவில்லை. எனவே பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் புதுச்சேரி கடலில் நின்று விட்டு திரும்பிவிட்டது’ என்றனர்
Leave your comments here...