விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அக்டோபர் 23ம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும் என ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.
சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில், அம்மாநில அமைச்சரவை இன்று கூடியது. அக்டோபர் 23ம் தேதி முதல்வரின் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும், அமைச்சர்கள் அங்கிருந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகங்களை தேர்வு செய்வதற்கான குழுவை நியமிக்கவும், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான உத்தரவாத ஓய்வூதியத் திட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், குறும்பத்தில் நடைபெறவிருக்கும் பொறியியல் கல்லூரியில் பழங்குடியினருக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கவும், போலவரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8,424 வீடுகள் கட்டவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...