புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி அதிகாரிகள் நியமனம்: டுவிட்டர் நிறுவனம் தகவல்

Scroll Down To Discover

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி முக்கிய பதவிகளை உருவாக்கி அதில் அதிகாரிகளை நியமித்துள்ளதாக ‘டுவிட்டர்’ நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சமூக வலைதளங்கள் சர்ச்சை கருத்துகள் பகிர்வதை கட்டுப்படுத்தவும், அது தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கும் உரிய அதிகாரிகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நியமிக்க வேண்டும்.

டுவிட்டர் நிறுவனம் அத்தகைய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் மத்திய அரசுக்கு போக்கு காட்டி வந்தது. இது தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டுவிட்டர் நிறுவனம் சார்பில் நேற்று டில்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தலைமை இணக்க அதிகாரி, குறை தீர்ப்பு அதிகாரி, பொறுப்பு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அதிகாரிகளின் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதை சுட்டிக் காட்டி முழுமையான விபரங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.