புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க சம்மதம் – மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் கடிதம்

Scroll Down To Discover

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ‘ பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்- ஆப், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில், மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அறிமுகப்படுத்தியது.

புதிய விதிகளில், ‘புகார்கள் குறித்து விசாரிக்க, இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்’ என்பது உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்தப் புதிய விதிகள், கடந்த மாதம், 26ல் அமலுக்கு வந்தன. கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள், இதற்கு சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன.ஆனால், ‘டுவிட்டர்’ நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது.

இதையடுத்து, ‘புதிய விதிகளை ஏற்காவிட்டால், கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என, டுவிட்டர் நிறுவனத்தை, மத்திய அரசு எச்சரித்தது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு, டுவிட்டர் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், ‘புகார்களை விசாரிக்க இந்திய அதிகாரி ஒருவரை, ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளோம்.மற்ற விதிகளை ஏற்று, அதன்படி செயல்படுவதற்கான நடவடிக்கைகளையும், எடுத்து வருகிறோம். இன்னும், ஒருவாரத்தில் இது தொடர்பான உறுதியான விபரங்களை தெரிவிக்கிறோம்’ என, தெரிவித்துள்ளது.