பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.மாநிலம் வாரியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டுப்பதிவுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் வருகிற 24, 25-ந்தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார்.அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு பணிகள் முடிந்த பிறகு இந்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வு பணிகள் நீடித்தால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும். நாடு முழுவதும் 6 முதல் 8 கட்டங்கள் வரை தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை முடித்து விட்டு பிரசாரத்தை தொடங்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி விட்டார். நேற்று அவர் அரியானா மாநிலத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அடுத்த கட்டமாக திங்கட்கிழமை காஷ்மீர் மாநிலத்தில் பிரசார பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு உத்தரபிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பா.ஜ.க. தொண்டர்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தென் மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வர உள்ளார். வருகிற 26-ந்தேதி முதல் 3 அல்லது 4 நாட்களுக்கு பிரதமர் மோடி தென் மாநிலங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். அவரது சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. தென் மாநிலங்கள் சுற்றுப்பயணத்தின் போது தமிழகத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
முன்னதாக பிரதமர் மோடி 25-ந்தேதி பல்லடத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி கேரள மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதை முடித்துக் கொண்டு அன்றே தமிழகம் வருகிறார். அன்று பல்லடத்தில் நடக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேச உள்ளார்.
அந்த கூட்டத்துக்கு 12 லட்சம் முதல் 15 லட்சம் தொண்டர்களை திரட்ட பாரதிய ஜனதா ஏற்பாடுகளை செய்து வருகிறது.பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஒரு கட்சி நிகழ்ச்சியிலும், ஒரு அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். பல்லடத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியை மற்றொரு ஊரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 28-ந்தேதி அந்த நிகழ்ச்சி நடைபெறும். நெல்லை அல்லது தூத்துக்குடியில் அந்த அரசு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
தூத்துக்குடி துறைமுகம் மற்றும் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றுக்கான நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வது உறுதியாகி உள்ள நிலையில் அவரது வருகை 26 மற்றும் 27-ந்தேதிகளில் இருக்கலாம் அல்லது 27 மற்றும் 28-ந் தேதிகளில் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஓரிரு தினங்களில் பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயண விவரம் முழுமையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave your comments here...