பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கி கவுரவிப்பு.!

Scroll Down To Discover

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடியாக வலம் வருபவர் பி.சுசீலா(85). 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பாடி வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இவரின் சாதனை எண்ணிலடங்காதது. பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வென்றிருப்பவர் 5 முறை தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு மற்றொரு மகுடமாய் தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடக துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

பாடகி பி.சுசீலாவுக்கு 2019ம் ஆண்டுக்கான புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும், பொற்பதக்கமும் அறிவிக்கப்பட்டது. வயது மூப்பு மற்றும் கொரோனா பரவல் அச்சத்தால் டாக்டர்கள் அறிவுரையை ஏற்று இவர் கலைமாமணி விருது வழங்கும் விழாவுக்கு சென்று விருதை பெற முடியவில்லை.

இந்நிலையில் சுசீலாவின் இல்லத்திற்கே சென்று சிறப்பு கலைமாமணி விருதை இயல் இசை நாடக மன்ற அதிகாரி ஹேமநாதன் வழங்கி கவுரவித்தார். இதை மகிழ்ச்சியுடன் சுசீலாவும் பெற்றுக் கொண்டார். இந்த விருதை பெறும் முதல் இசை கலைஞர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.