பிட்காயின் மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவரின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்..!

Scroll Down To Discover

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

2017-ம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று வேரியபில் டெக் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் விளம்பரம் செய்து, பொதுமக்களிடமிருந்து ரூ.6,600 கோடி அளவுக்கு வசூலித்தது.  ஆனால் பொதுமக்கள் கட்டிய பணம் மோசடி செய்யப்பட்டது.  இதனால் பிட் காயினில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர்.

இந்த பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.  இம்மோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.  உக்ரைனில் பிட்காயின் உருக்கு ஆலை அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.  இன்னும் அந்த பிட்காயின் ராஜ் குந்த்ராவிடம் தான் இருப்பதாக கூறப்படுகிறது.  அதன் மதிப்பு ரூ.150 கோடி என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராக்கு சொந்தமான 97.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.  இதில் ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு,  புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்கள் அடங்கும்.  பிட்காயின் மோசடியில் கிடைத்த பணத்தின் மூலம் தான் இந்த வீடுகள் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.