பாராலிம்பிக் போட்டி : வரலாற்று சாதனை படைத்த பவினா படேல்.. பிரதமர் மோடி பாராட்டு

Scroll Down To Discover

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் 162 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான டேபிள் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா பட்டேல், சீன வீராங்கனை மியாவோ ஜாங்குக்குவை எதிர்கொண்டார். இறுதியாக 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்தார்.

இன்று (ஆக.,29) நடந்த இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை எதிர்கொண்டார் இந்தியாவின் பவினா. இதில், 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை துவக்கி வைத்தார். பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் வெள்ளி வென்ற பவினாவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பவினா.


மேலும் டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பவினாபென்னுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பவினாவின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் – பிரதமர் மோடி