பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு – 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!

Scroll Down To Discover

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியை போலீசார், ராணுவத்தினர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொண்ட கூட்டுக் குழுவினர் சுற்றி வளைத்தனர். பின்னர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதனால் ராணுவ வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு அதிகாரி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துப்பாக்கி சண்டை நடைபெறும் பகுதிக்கு கூடுதல் படையினர் விரைந்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, தேடுதல் வேட்டை தொடர்கிறது.