பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சுப்ரீம் கோர்ட்டில் ரத்து செய்த தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடன் முறையான ஆலோசனைக்கு பிறகு, தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.
அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்” என்றார்.
முன்னதாக, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் ரொக்க நன்கொடைகளுக்கு மாற்றாகவும், அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காகவும், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 2, 2018 அன்று அறிமுகப்படுத்தியது. ஆனால், பிப்ரவரி 2024-ல், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசின் தேர்தல் பத்திர திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்து அதனை ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்ள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...