பாஜகவினரை குறிவைத்து தாக்குதல் – மத்திய உள்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்..!

Scroll Down To Discover

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை தாக்குதல்கள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் தேவையற்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதாகவும், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை என்றும் அண்ணாமலை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். வகுப்புவாத சக்திகளுக்கு துணை போகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை எல்லாம் ஆதாரங்களுடன் ஆவண விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி அமித் ஷாவுக்கு அனுப்பி உள்ளதாக அண்ணாமலை கூறி உள்ளார். ஜே.பி.நட்டாவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை கவனித்து சென்றுள்ளதாக கூறியிருக்கிறார்.

தமிழக அரசு நீதிக்கு புறம்பாக பாஜகவினருக்கு எதிராக காவல்துறையினரை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த நடவடிக்கை இப்படியே தொடர்வதை, பாஜகவும் மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும் கூறியிருக்கிறார். அனைவரின் பாதுகாப்புக்காக பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.