பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது – 144 தடை உத்தரவு அமல்..!

Scroll Down To Discover

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இம்ரான்கான் ஆட்சியில் இருந்த காலத்தில் சொத்து அதிகம் சேர்த்தது, மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், சில வழக்கு தொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து வந்துள்ளார். கோர்ட் வெளியே அவரை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர், இம்ரான் கானை கைது செய்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் தாக்குதலுக்கு உள்ளானார். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை, போலீசாரும், அவரது கட்சியினரும் உறுதி செய்துள்ளனர்.

அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் அல் காதீர் டிரஸ்ட் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், போலீசார் அவரை துன்புறுத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் இம்ரான் கான் அளித்த பேட்டியில், என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர். இதற்கு தயாராக உள்ளேன் எனக்கூறியிருந்தார்.இதனிடையே, அவரது கட்சியான பாகிஸ்தான் இ தெஹ்ரிக் இன்சாப் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ரேஞ்சர்ஸ் படையினர் தள்ளிவிட்டதில், இம்ரான் கானுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என குற்றம்சாட்டி உள்ளது.

கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தை இம்ரான் கான் விமர்சனம் செய்து வந்தார். தன்னை கொலை செய்ய சதி நடப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தது. இதனை மறுத்த ராணுவம், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்துவதாக கூறியிருந்தது.இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. கைது குறித்து விளக்கம் அளிக்கும்படி, உள்துறை அமைச்சக செயலாளர், போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.