பாகிஸ்தான் மக்களை தவறாக வழி நடத்துகிறது – இந்திய ராணுவத்திடம் சிக்கிய அலி பாபர் பத்ரா பயங்கரவாதி பேசிய வீடியோ..!

Scroll Down To Discover

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது பிடிபட்ட தீவிரவாதி, `மக்களை பாகிஸ்தான் தவறாக வழி நடத்துகிறது. காஷ்மீரில் விரைவில் அமைதி நிலவும் என்று நம்புகிறேன்,’’ என்று பேசிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் அருகே உள்ள உரி எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 18ம் தேதி முதல் வீரர்கள் அங்கு தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், கடந்த 26ம் தேதி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேரில் 2 பேரை பிடித்தனர். அவர்களில் ஒருவன் தப்பிக்க முயற்சிக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டான்.

மற்றொருவன் ராணுவத்தினரிடம் பிடிபட்டான். அவன், தனது பெயர் அலி பாபர் பத்ரா. லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவன் என்று கூறினான். இதனைத் தொடர்ந்து, அவனிடம் விசாரணை நடத்திய ராணுவம் நேற்று அவன் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அதில் அவன் பேசியிருப்பதாவது: இந்திய ராணுவம் ரத்தம் வரும்படி அடித்து சித்ரவதை செய்வார்கள் என்று எங்களுக்கு கூறப்பட்டது. ஆனால், இங்கு மிகவும் அமைதியாக நடத்துகின்றனர். இந்திய ராணுவம் நன்றாக கவனித்து கொண்டதாக என் அம்மாவிடம் சொல்வேன். இங்கு 5 நேரமும் தொழுகை சத்தத்தை கேட்க முடிகிறது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை தலை கீழாக உள்ளது.

இதை பார்க்கும் போது காஷ்மீரில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் இதற்கு முரண்பாடாக, எங்களின் இயலாமையை பயன்படுத்தி காஷ்மீருக்கு அனுப்புகிறது. மக்களை தவறாக வழி நடத்துகிறது. சிலாகோட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த போது லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் அனாஸ் என்பவன், ரூ.20,000 முன்பணம் கொடுத்து இங்கு அனுப்பினான். கைபரில் உள்ள டெலிஹபிபுல்லா ஐஎஸ்ஐ முகாமில் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவன் கூறியுள்ளான்