பள்ளிக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் தாளாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் அரசிற்கு வலியுறுத்தல்

Scroll Down To Discover

பள்ளிக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் தாளாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கொரோனா வைரஸ் எனும் கொடிய அரக்கனால் உலகமே ஸ்தம்பித்து போயுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது படிபடியாக ஊரடங்கை தளர்த்தி வருகிறது. இருந்த போதிலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை மார்ச் 22-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மூடப்பட்ட காரணத்தால், வேலையின்றி, வருவாயின்றி மக்கள் தவித்து வந்தனர். ஜூன் 1-ம் தேதி முதல் ஒரளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, தற்போது தான் சிலர் பணிக்கு செல்ல தெடாங்கியுள்ள போதிலும், பொருளாதார சீரழிவு காரணமாக பல நிறுவனங்கள் தொழிலாளர்களை குறைத்துள்ளது.

இதனால் இந்தியாவில் பல லட்சகணக்கான மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை வசூலிக்கும் வசூல்ராஜா செயலில் இறங்கியுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் வருவாயின்றி தவித்து வருவதால், தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் கல்வி கடன் பெறும் வசதியை தனியார் பள்ளிகளே செய்து தருகின்றனர். தற்போது கல்வி கட்டணத்தை தனியார் நிதி நிறுவனங்கள் பள்ளிக்கு செலுத்தி விட்டு, அதனை இஎம்ஐ எனும் மாத தவணை முறையில் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கும் செயலில் இறங்கியுள்ளன.

குழந்தைகளுக்கு இலவச கல்வி கொடுக்க வேண்டும் என்று பல சமூக அமைப்புகளும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருவது ஒருபுறமிருக்க, தனியார் பள்ளிகள் புத்தக கட்டணம், விளையாட்டு, சீருடைகள் என பல்வேறு கட்டணங்கள் சேர்த்து பள்ளிகளின் கட்டணங்கள் வானளவு உயர்ந்து நிற்கிறது. எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மாணவர்களுக்கு பல ஆயிரங்களிலும், லட்சத்திலும் கட்டணத்தை தனியார் பள்ளிகள் மனசாட்சி இல்லாமல் வசூலித்து வருகின்றன. கல்வியை மேலும் மேலும் வியாபார மயமாக்கி வருகின்றனர்.

கொரோனா வைரசை அடுத்து ஊரடங்கால் பெற்றோர் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் உள்ள சூழலில் பள்ளிகள் கட்டணம் செலுத்த கூறுவது நியாயமற்றது. இனிமேல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தால் அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும் . மேலும் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பி பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி மீறி கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் தாளாளரை குண்டர்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது