பயணியர் ரயில் சேவையை குறைக்கவோ, நிறுத்தவோ திட்டம் எதுவும் இல்லை – ரயில்வே நிர்வாகம்

Scroll Down To Discover

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை, நாடு முழுவதும் தீவிரமடையத் துவங்கிஉள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டை போலவே, ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்ற வதந்தி பரவியது.

இதனால், நாடு முழுவதும் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக, இன்று காலை முதல், ரயில் நிலையங்களில் குவியத் துவங்கினர்.

பல்வேறு மாநில ரயில் நிலையங்களிலும், வழக்கத்துக்கு மாறாக பயணியர் கூட்டம் அதிகரித்தது.இதையடுத்து, வீண் வதந்திகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக, ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள், செய்தியாளர் களை நேற்று சந்தித்தனர்.

அவர்கள் கூறியதாவது: பயணியர் ரயில் சேவையை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ ரயில்வே நிர்வாகம் திட்டமிடவில்லை. தேவைக்கு ஏற்றாற்போல பயணியர் ரயில்கள் அதிகரிக்கப்படும். தேவை அதிகரிக்கும் போது, ரயில் சேவையும் அதற்கேற்ப உயர்த்தப்படும். பயணியர் பதற்றப்பட தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுவாகவே, கோடை காலத்தில் ரயில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். அதைப் போல தான், தற்போது பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதைசமாளிக்க, ஏற்கனவே ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.