பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு : ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு உத்தரவு அதிரடி..!

Scroll Down To Discover

பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2006ல் கேரளாவில் துவக்கப்பட்டது. இது புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு பயிற்சி முகாம்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு 19 வழக்குகளை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் என்.ஐ.ஏ. – அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தியது. பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர்கள், துணை தலைவர்கள், நிர்வாகிகள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அன்றைய தினம் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுதும் ஏழு மாநிலங்களில் போலீசார் நேற்று மீண்டும் நடத்திய சோதனையில், பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், பி.எப்.ஐ., அமைப்பை சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.