பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ.வில்சன் மகளுக்கு வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் வேலை..!!

Scroll Down To Discover

களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு இகொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இந்த 2 பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய மேலும் பலரும் கைதானார்கள்.இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து கொச்சி என்.ஐ.ஏ. அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி, மகள்கள் ஆன்டிரிஸ் ரினிஜா, வினிதா ஆகியோர் பரிதவிப்புக்குள்ளானார்கள். வில்சனை இழந்து தவித்த அவரது குடும்பத்தினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 கோடி அரசு நிதி உதவி வழங்கினார்.


இதை தவிர வில்சனின் மகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்து இருந்தார். அதன்படி வில்சனின் மூத்த மகளான ஆன்டிரிஸ் ரினிஜாவுக்கு (வயது 27) வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் வேலைக்கான ஆணையை ஆன்டிரிஸ் ரினிஜாவிடம் வழங்கினார்.