பண மோசடி விவகாரம்.. லதா ரஜினிகாந்த் எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Scroll Down To Discover

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரித்ததற்காக தனியார் விளம்பர நிறுவனத்திடம் ரூ. 6.2 கோடியை கடன் பெற்றிருந்தார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பமிட்டிருந்தார்.

கடன் பெற்ற பணத்தை தனியார் நிறுவனத்திற்கு அளிக்கவில்லை என தெரிவித்து தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெங்களூர் மாநகரம் 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த போலீசார் லதா ரஜினிகாந்த் மீது போலி ஆவணங்களை தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார். இதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்தியத் தண்டனைச் சட்டம் 196 , 199 , 420 ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களைத் திரித்துத் தாக்கல் செய்த பிரிவுகளின்கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது.

இந்த உத்தரவிற்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் லதா ரஜினிகாந்திற்கு எதிரான மோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு அனுமதியளித்திருப்பதுடன் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுப்படுத்தியுள்ளது.