பணியிடமாற்றத்துக்கு கோரிக்கை : அமைச்சர்கள், எம்.பி.,க் கள் மூலம் அணுகினால் நடவடிக்கை – அதிகாரிகளுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை

Scroll Down To Discover

மத்திய தலைமையக சேவையின் கீழ் வரும் உதவி பிரிவு அலுவலர்கள் இடமாற்றம் கோரி, அமைச்சர்கள், எம்.பி.,க் கள் உள்ளிட்டோரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றும் உதவி பிரிவு அலுவலர்கள், மத்திய தலைமையக சேவையின் கீழ் வருகின்றனர். ‘குரூப் – பி’ அலுவலர்களான இவர்களுடைய சேவை பெரும்பாலும் அமைச்சகங்கள் அல்லது துறையின் தலைமையகமான டில்லியில் தேவைப்படுகிறது.ஆனால், தனிப்பட்ட அல்லது மருத்துவ காரணங்கள் கூறி, பணியிடமாற்றம் கேட்டு பலர் விண்ணப்பிக்கின்றனர்.

இது குறித்து அந்த துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- உதவி செக்ஷன் அதிகாரிகள் பலர், தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பணியிட மாற்றம் கோருகிறார்கள். ஆனால் இந்த கோரிக்கைகள், மந்திரிகள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.

இதை நாங்கள் கடுமையாக அணுகுவோம். விதிமுறைப்படி, இப்படி அணுகும் உதவி செக்ஷன் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் பணி தொடர்பான விவகாரங்களில் தங்கள் நலனுக்காக மேலதிகாரிகளிடம் அரசியல் செல்வாக்கோ, வெளிப்புற செல்வாக்கோ செலுத்தக்கூடாது என்று அரசு பணியாளர் நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த விதிமுறைகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.