`பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் : அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி

Scroll Down To Discover

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான மத்திய அரசின் தடை செல்லும் என்று உத்தரவிட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால், ஒரே இரவில் ரூ.10 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

முன்னதாக இந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசின் பரிசீலிக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. அதற்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு என்றும், கறுப்புப் பணம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மத்திய அரசு பதிலளித்தது.

இதையடுத்து வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி மீண்டும் உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் செல்லும் என்று உத்தரவிட்டு, அதற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

பொருளாதாரம் சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க முடியாது என்றும், ஆர்பிஐ சட்ட விதி எண் 26(2)ன் படி ரூபாய் நோட்டுக்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் உண்டு என்றும் கூறிய நீதிபதிகள், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டனர். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், நீதிபதி நாகரத்ணா எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.