பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கி கள்ளழகர் – பக்தர்கள் வெள்ளத்தில் குலுங்கிய மதுரை…!

Scroll Down To Discover

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்புக்காக கோவிலின் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி விழா நடைபெற்றது.

ஆனால், இந்த ஆண்டுக்கான விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன் தினமும், திருத்தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது.அதன்படி, கள்ளழகர் இன்று காலை பச்சைப்பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளினார். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரமடைந்தனர்.

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கள்ளழகர் பச்சை பட்டுடன் எழுந்தருளியதால் இந்த ஆண்டு மக்களின் வாழ்கை பசுமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளுக்கு பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். இந்த நிகழ்வால் மதுரை மாநகரமே பக்தர்கள் வெள்ளத்தில் குலுங்கியது.