‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தை தொடங்கியதற்காக தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு..!

Scroll Down To Discover

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ (Green TN Mission) என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “#காவேரிகூக்குரல் இயக்கம் #பசுமைதமிழ்நாடு திட்டத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவை தெரிவித்து கொள்கிறது. இத்திட்டம் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கும், மாநிலத்தில் செழிப்பையும், நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கும் மிகவும் அவசியம். தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, அடுத்த 2 ஆண்டுகளில் 1.77 கோடி மரக்கன்றுகளை உருவாக்க ரூ.38.80 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இதேபோன்ற நோக்கத்துடன் தான், சத்குரு அவர்களும் காவேரி கூக்குரல் இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அவ்வியக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 2020, 2021-ம் ஆண்டுகளில் மொத்தம் 2.1 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 3.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வியக்கத்தின் மூலம், சுற்றுச்சூழல் மேம்பாடு மட்டுமின்றி விவசாயிகளின் பொருளாதாரத்தையும் ஒருசேர அதிகரிக்கும் விதமாக பண மதிப்பு மிக்க மண்ணுக்கேற்ற மரங்கள் நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தை அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது.