பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா – பம்பை ஆற்றில் சபரிமலை அய்யப்பனுக்கு நாளை ஆராட்டு..!

Scroll Down To Discover

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 16-ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி, படிபூஜை நடைபெற்று வந்தது. 9-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

இதனையொட்டி நாளை காலை 8 மணிக்கு அய்யப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ஊர்வலம் காலை 11 மணிக்கு பம்பை வந்து சேரும்.

பின்னர் பம்பை நதிக்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆராட்டு கடவில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். ஆராட்டு சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றுவார். களபம், மஞ்சள் பூசி ஆராட்டு கடவில் 3 முறை மூழ்கி அய்யப்பனுக்கு ஆராட்டு சடங்கு நிறைவேற்றப்படும்.

இதனைத்தொடர்ந்து புத்தாடை அணிவித்து அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக அய்யப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்படும். மாலையில் அய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அத்துடன் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.