நாயுடன் நடைபயிற்சி செய்ய மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் அதிகாரியின் அத்துமீறல் – உள்துறை அமைச்சகம் அதிரடி டிரான்ஸ்பர்..!

Scroll Down To Discover

நாயுடன் நடைபயிற்சி செய்ய ஒட்டுமொத்த மைதானத்தையும் தினம் காலி செய்ய வைத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி இருவரையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி டிரான்ஸ்பர் செய்துள்ளது.

ஐஏஎஸ் அலுவலர் சஞ்சீவ் கிர்வாரை லாடக்கிற்கும், அவரது மனைவியை அருணாசலப் பிரதேசத்திற்கும் உடனடியாக இடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மைதானத்தை பயன்படுத்துவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட வேண்டும் என டெல்லி தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பகிர்ந்துள்ளார். அதற்கு கீழே, இந்த விவகாரம் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் இனி இரவு 10 மணிவரை வீரர்களின் பயிற்சிக்காக திறந்து வைக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

டெல்லியின் வருவாய் பிரிவு முதன்மை செயலாளராக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் கிர்வார். இவர் டெல்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டு மைதானத்தில் மாலை 7.30 மணி அளவில் தனது மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் தினமும் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தாங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மைதானத்தில் பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்கள் அங்கிருந்து மாலை 6.30 மணிக்கெல்லாம் காலி செய்து வெளியேற வேண்டும் எனவும், அதன் பின்னர் மைதான ஊழியர்கள் மைதானத்தை சுத்தமாக்கி வைக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி கடந்த ஒரு வார காலமாக வீரர்கள் மாலை 6.30க்கு எல்லாம் வெளியேற்றப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் தனது மனைவி மற்றும் நாயுடன் வாக்கிங் போக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியானது. ஐஏஎஸ் அதிகாரியின் இந்த அதிகார அத்துமீறலுக்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தன. இதையடுத்து தம்பதி இருவர் மீதும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.