நவராத்திரி பிரம்மோற்சவம் – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து…!

Scroll Down To Discover

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) அங்குரார்பனமும் நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழாவும் கோலாகலமாக தொடங்குகின்றன.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) முதல் அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளன. இதனால் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம். வரும் 19-ந்தேதி ஆகம விதிகளின்படி 30 நிமிடங்களுக்கு முன்பாக 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வரும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வருகிற 24-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. திருப்பதியில் நேற்று 65,937 பேர் தரிசனம் செய்தனர். 24,101 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.