தொலை தூர கிராமங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக முதன்முதலாக நடமாடும் பரிசோதனை ஆய்வகம்..!

Scroll Down To Discover

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,80,532 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,573 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 2,04,711உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், முதன்முதலாக ஊரகப் பகுதி மற்றும் தொலை தூர கிராமங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் பரிசோதனை ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.சுகாதார தொழில்நுட்ப பற்றாக்குறையை போக்கவும், சுயசார்பை நோக்கி முன்னேறும் வகையிலும் நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆந்திர மாநில Med-tech zone இணைந்து இந்த நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தை உருவாக்கியுள்ளன.


டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தொலைதூரப் பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை வசதியை உறுதிப்படுத்தும் வகையில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வகமானது, ஒரு நாளைக்கு 25 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள், 300 எலிசா சோதனைகள் மற்றும் காசநோய், எச்.ஐ.வி.க்கும் சோதனைகளை செய்யும் திறன் கொண்டுள்ளது என்றார். இந்தியாவில், தற்போது 953 ஆய்வகங்கள் உள்ளது. இதில் 699 ஆய்வகங்கள் அரசுக்குச் சொந்தமானது என்றும் அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.