தேசிய அளவிலான களரிப் போட்டி: 7 பதக்கங்களை வென்ற ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்!

Scroll Down To Discover

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் களரிப் பயட்டு ஒரு முக்கியமான தற்காப்பு கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப் பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி, 2022-ம் ஆண்டிற்கான போட்டிகள் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அக்டோபர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டிகளின் முடிவில், ‘ஹை கிக்’ பிரிவில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர் பத்மேஷ் ராஜ் தங்கப் பதக்கமும், பெண்களுக்கான மெய் பயட்டு பிரிவில் எம்.ஈஷா வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மேலும், மெய் பயட்டு பிரிவில் பாவனா, பத்மேஷ் ராஜ், சுவாடுகள் பிரிவில் சாய் ஹர்ஷித், இன்ப தமிழன், ரஷ்வந்த் ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கம் வென்றனர்.

கோவையில் உள்ள ஈஷா சம்ஸ்கிரிதியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. யோகா, இசை, நடனம், ஆயுர்வேதம் ஆகியவற்றுடன் சேர்த்து தற்காப்பு கலையான களரியும் கடந்த 14 வருடங்களாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டு அர்ப்பணிப்புக்கு பிறகு கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் ‘ப்ராஜக்ட் சம்ஸ்கிரிதி’ என்ற பெயரில் இக்கலைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகின்றனர்.