தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ளது. புதிதாக தொழில் துவங்க முன் வருவோரும், இங்கு ஏற்கனவே ஆலைகள் நடத்துவோரும், புதிய ஆலைகள் அமைக்க, இந்த வட மாவட்டங்களையே தேர்வு செய்கின்றனர்.
மதுரை, பகுதியில் ஓரளவு ஆலைகள் இருந்தாலும், மற்ற மாவட்டங்களில் தொழில் வளம் இல்லை. இதனால், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி, வெளிநாடு செல்கின்றனர். சென்னையில் அதிகளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன. இதனால் அனைத்து இளைஞர்களும் வேலைவாய்ப்பு தேடி சென்னைக்கு படையெடுக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் அதிமுக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
அதன்படி தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் சீனாவின் விண்டெக் மின்சாரவாகன தயாரிப்பு நிறுவனத்தை அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...