தென்னிந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் – ஐ.நா சபையின் அறிக்கையில் எச்சரிக்கை ..!

Scroll Down To Discover

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அது தொடர்பான பயங்கரவாதிகள் குறித்த ஐ.நா.,வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குறித்த 26வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகர் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 முதல் 200 அல்கொய்தா பயங்கரவாதிகள் வரை இருக்கக்கூடும்.

அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத், தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இந்திய கிளை, (ஹிந்த் விலாயா), கடந்த 2019ம் ஆண்டு மே 10ல் வெளியிட்ட அறிக்கையில் 180 முதல் 200 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தியாவில் புதிய நிர்வாகப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.ஐஎஸ் பயங்கரவாதிகளின் செய்தி குறித்து வெளியிடும் அமாக் நியூஸ் ஏஜென்ஸியில் அந்த அமைப்பு தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு மொழியில் “விலையா ஆஃப் ஹிந்த்”(இந்திய நி்ர்வாகப்பகுதி) எனத் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.