துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் – உயிரிழப்பு 600-ஐ தாண்டியது : பிரதமர் மோடி இரங்கல்..!

Scroll Down To Discover

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர் அவர்களை மீட்கவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். துருக்கி நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு உடைமைகள் சேதமடைந்துள்ளது வேதனை தருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.