திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி கிராமசபைக் கூட்டம் கூட்டிய திமுக எம்எல்ஏ. சரவணன்

Scroll Down To Discover

நாடு முழுவதும் கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்டப் பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் உள்ளிட்டவைகளை பெறப்படும்.

அந்தவகையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்போது கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என நேற்றையதினம் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் தமிழக அரசின் உத்தரவை மீறி மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள நிலையூர் 1வது பிட் ஊராட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது:- கிராமசபை கூட்டத்தில் முதல் தீர்மானமாக மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் மொத்தமாக 7 தீர்மானங்கள் நடைபெற்றது.

ஆளும் கட்சியினருக்கு சாதகமாக சூழல் இல்லை என்பதால் தற்போது கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளது. ஏனெற்றால் கிராமசபை கூட்டத்தின் தீர்மானம் உச்சநீதிமன்றம் வரை அழுத்தம் கொடுக்கும் என்பதாலேயே ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது.