தமிழ்நாட்டில் மத்திய அரசின் வளர்ச்சி பணிகளுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய இணை அமைச்சர் விகே.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
2 நாள் பயணமாக கன்னியாகுமரி மாவட்டம் வந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 4 வழி சாலை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. போதுமான மண் மற்றும் கல் போன்றவை கிடைக்காததாலும் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காததாலும் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். குறிப்பாக ஒப்பந்ததாரர்கள் பணியை சரிவர மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது எனவும் வெளிப்படையாக சொல்ல முடியாத சில நெருக்கடிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம் தமிழ்நாடு முதலமைச்சர் 4 வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்ததையும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தால், எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை எனவும் பாரதம் ஒன்றுபட்ட பாரதமாகவே இருக்கிறது என கூறினார்.
அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க போதுமான இடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கினால் அது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என கூறினார். ஏற்கனவே இந்தியா முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது எனவும் இதில் 65 விமான நிலைய பணிகள் நடந்து வருகிறது எனவும் கூறினார். எனவே இதற்கு போதுமான ஒத்துழைப்பு மற்றும் இட வசதி கிடைத்தால் நிச்சயமாக 2 ஆண்டுகளுக்குள் 100 விமான நிலையங்களும் இந்தியாவில் அமையும் என்று கூறினார்.
Leave your comments here...