தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி – புறநகர் மின்சார ரயில் சேவை மேலும் 4 நாட்களுக்கு ரத்து..!

Scroll Down To Discover

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 55 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஆக.14 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு (ஆக.18) நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் தான். இந்த சூழலில், தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக ஆக.14-ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு (ஆக.18 வரை) புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது, “விழுப்புரம் – தாம்பரம் (06028), விழுப்புரம் – மேல்மருவத்தூர் (06726), மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை (06722), புதுச்சேரி – சென்னை எழும்பூர் (06026), சென்னை எழும்பூர் – புதுச்சேரி (06025), சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் (06721), மேல்மருவத்தூர் – விழுப்புரம் (06725), தாம்பரம் – விழுப்புரம் (06027) ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையிலும், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.  பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சில ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி பகல் 12 மணியில் இருந்து அனைத்து மின்சார ரயில்களும் வழக்கமான அட்டவணைப்படி இயங்க தொடங்கும். ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்ட நாள்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.