தலைமுறைகளை கடந்து வசீகரித்த காந்த குரலோன் : பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.!

Scroll Down To Discover

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74). திரையுலகில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 50 ஆண்டுகளாக பல்லாயிரம் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்திய அவருக்கு கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும் விரைவில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்றும் வீடியோவில் அவர் பேசி இருந்தார்.

இந்த நிலையில் 51 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் திடீரென்று மோசம் அடைந்தது. இதுகுறித்து மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு எக்மோ உள்ளிட்ட இதர உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசம் அடைந்தது.

இதையடுத்து அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று காலமானார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார் என்று இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.