நமக்கு புண்ணியம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தர்மம் செய்யக் கூடாது. தர்மம் என்பது பிறரின் நன்மைக்காக என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த இறைவன் நம் கையில் கொடுத்த வரத்தை எவர் நினைத்தாலும் திரும்ப வாங்க முடியாது. முதலில் நாம் ஒரு தர்ம காரியத்தில் ஈடுபடும் போது, அதன்மூலம் நமக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கும், என்று கணக்கு வழக்கு வைத்துக்கொண்டு தர்ம காரியத்தில் ஈடுபடுவது சரியான முறை அல்ல. தர்மம் பெற்றவர்கள் பலன் அடைந்தார்களா? என்பதை சிந்திக்க வேண்டும். அதாவது செய்யப்படும் தர்ம காரியமானது, முதலில் முழுமனதோடு இருக்க வேண்டும்…
நாம் எத்தனை லட்சத்தை தர்மமாக கொடுத்திருக்கின்றோம் என்பது அவசியமில்லை. எப்படிப்பட்ட மனதோடு அதை கொடுத்தோம் என்பதில் தான் புண்ணியமே அடங்கியுள்ளது. மனதார செய்யப்படும் தர்மமானது எந்த சூழ்நிலையில் எப்படி செய்தாலும் அது தர்மம்தான். மனத்திருப்த்தி இல்லாமல் அளிக்கப்படும் தர்மமானது எந்தவகையிலும் தர்மமே இல்லை. காலதாமதமாக செய்யும் உதவி எப்படி பலன் அளிக்காதோ, அதேபோல் சகுனங்கள் பார்த்து செய்யும் தர்மத்திற்கும் எந்த பயனும் இல்லை.
உதாரணமாக நீங்கள் கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது ஒரு முதியவர் பசிக்கிறது என்று தர்மம் கேட்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும், உங்களால் முடிந்தால் ஒரு வேளை உணவு வாங்கித் தரலாம் அல்லது ஒரு பத்து ரூபாயை கொடுத்து விடலாம். ‘இல்லை! நான் கோவிலுக்குள் சென்று அந்த இறைவனே தரிசனம் செய்து வந்துவிட்டேன். இப்பொழுது நான் தர்மம் செய்தால் இறைவனிடம் வாங்கிய வரங்கள் எல்லாம் வீணாகிவிடும். நாளைக்கு நான் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது உனக்கு தானம் கொடுக்கின்றேன்’ என்று கூறிவிட்டு, மறுநாள் அவருக்கு தர்மம் செய்தால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த முதியவரின் பசியை உடனடியாக தீர்ப்பதே உண்மையான தர்மம்.
தர்மம் கேட்டு வருபவர்களை திட்டி விட்டு தர்மம் செய்வதும், அவர்களை வெகு நேரம் காக்க வைத்து, அலைகழித்து தர்மம் செய்வதும் தவறுதான்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் இருக்கும் வாழ்க்கையில் ஒருவருக்கு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை உணர்ந்தவர்கள் தன் மனதார அறிந்து எந்த தவறையும் செய்ய மாட்டார்கள்…
Leave your comments here...