தரமில்லாத பொங்கல் பரிசுப் பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் ஆர்டர் – அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover

தரமில்லாத பொங்கல் பரிசுப் பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் புட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.

பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.

இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம். தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.