தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – இன்று முதல் அமலுக்கு வந்தது..!

Scroll Down To Discover

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 -ந்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25  சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.