தமிழக பாஜக அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது..!

Scroll Down To Discover

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம், சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது. நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியுள்ளனர்.

நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது குறித்து, பா.ஜ.க. அலுவலகத்திலும், அதை சுற்றியுள்ள சாலைகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்துள்ள காவல்துறையினர், அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கேள்விப்பட்டு பா.ஜ.க கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தொண்டர்கள் கண்டன முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி உதவியுடன் சென்னை நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.