தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயா சாலை விபத்தில் மரணம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

Scroll Down To Discover

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேரிட்ட பயங்கர கார் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன், பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 18 வயதான விஸ்வா தீனதயாளன் 83வது தேசிய சீனியர் போட்டியில் பங்கேற்ற ஷில்லாங் சென்ற போது கார் விபத்தில் சிக்கினார். கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் சென்று இருந்த கார் மீது எதிரே வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.

இதில் விஸ்வா தீனதயாளன் பயணித்த கார் பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டது. விஸ்வா தீனதயாளன் உடன் ஓட்டுநரும் உயிரிழந்தார்.காரில் இருந்த மற்ற தமிழக வீரர்கள் 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த விஸ்வா தீனதயாளன், கடந்த ஜனவரியில் நடந்த தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் 19 வயது பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். இவரது மறைவு சக டேபிள் டென்னிஸ் வீரர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் விபத்தில் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு சாதனையாளராக உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் விஷ்வா தீனதயாளன் விரைவாக நம்மை விட்டு சென்றது வேதனை அளிக்கிறது. இதை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினர் ,நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.