தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி : வாரிசு அரசியலால், திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி – பிரதமர் மோடி

Scroll Down To Discover

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-கவிமணி, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேஷமணி ஆகியோரை நினைவு கூர்கிறேன்.வளர்ச்சி என்ற மந்திரத்தை முன்வைத்து மக்களை எதிர்கொள்கிறோம். மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு என்றும் பாடுபடும். தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

குமரி – மும்பை இடையே பொருளாதார வழித்தடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையை முக்கியமாக கருதுகின்றனர். தங்களின் வாரிசுகள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். உங்களின் நலன்கள் குறித்து கவலைப்படவில்லை.


திமுகவில் கருணாநிதியோடு தோளோடு தோள் கொடுத்து பணியாற்றிய அக்கட்சியில் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாட்டின் மனநிலை தெளிவாக உள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது. ஆட்சி கலைப்பை காங்கிரஸ் அரசு பல முறை பயன்படுத்தி உள்ளது. இதனால் திமுக., அதிமுக பாதிக்கப்பட்டு உள்ளன. அனைவரும் இணைந்து, அனைவரின் நம்பிக்கை பெற்று அனைவரும் உயர்வோம் என்பதே மத்திய அரசின் தாரக மந்திரம். மக்களுக்கு சேவை செய்வதில் மதம், ஜாதி ஆகியவற்றை மத்திய அரசு பார்ப்பதில்லை.

கொரோனாவின் போது, வெளிநாடுகளில் சிக்கி தவித்த 5 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த தமிழக பாதிரியாரை மீட்டோம்.கடலோர மேம்பாட்டுக்காக 3 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண் துறையை நவீனமயமாக்கி வருகிறோம். முதலீடுகளை ஈர்த்து,உள்ளூரில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

துறைமுகங்களின் திறன்கள் மேம்படும். புதிய துறைமுகங்கள் கட்டப்பட உள்ளன. இதனால், உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும். அதிக முதலீடுகளை ஈர்த்து உள்ளூரில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்; மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் கடனுதவியை வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்