தமிழகம் வந்த புதிய கவர்னர் -முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்பு – நாளை பதவியேற்கிறார்

Scroll Down To Discover

தமிழகத்தின் 14-வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி பொறுப்பு ஏற்றார்.

இவர் பஞ்சாப் மாநில கவர்னராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என். நேரு உள்ளிட்டோரும், தலைமைச் செயலர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தமிழகத்தின் புதிய கவர்னராக அவர் நாளை பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.