தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக சுகாதாரத்துறை அறிவுரை!!!

Scroll Down To Discover

மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம் தான். அதன்படி தமிழகத்தில் தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவிவரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வேகமாக பரவும் இந்த காய்ச்சலால் நான்கு நாட்களுக்கு அதீத காய்ச்சல் தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் பாடாய்படுத்துடுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதே இந்தக் காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பருவகாலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தோற்று என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். தற்போதைய சூழலில் காய்ச்சல், சளிக்கு டாக்டர்களிடம் உரிய பரிசோதனை செய்த பிறகே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.