தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக இன்று அனைத்து கட்சிகள் கூட்டம்..!

Scroll Down To Discover

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, 19.9.2021 அன்று சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

இந்த சட்ட மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் 8-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.