தமிழகத்தில் ஊரடங்கை மேலும் இருவாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் : டாக்டர்கள் குழு, முதல்வரிடம் பரிந்துரை

Scroll Down To Discover

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடிய இருக்கிறது. ஆனால், பல மாநிலங்கள் ஊரடங்கினை மேலும் நீட்டிக்க பரிந்துரைத்ததாக பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், வைரஸ் தொற்று அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட மருத்துவ வல்லுநர் குழு, முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தியது.

முதல் அமைச்சர் சந்தித்த பின்பு, மருத்துவ நிபுணர்கள் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் பிரதீபா கூறியதாவது: ” தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. அரசு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது. இருந்தபோதிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு தேவை. எனவே, ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை வைத்துள்ளோம்” என்றார்.