தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!

Scroll Down To Discover

சென்னையில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், அதன் முன்னாள் இயக்குநர் மற்றும் பிரபல எவர்சில்வர் வியாபாரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 27.11.2020 அன்று சோதனை நடத்தினர்.சென்னை மும்பை ஹைதராபாத் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில உள்ள மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

முன்னாள் இயக்குநரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்த்திருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பம் சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், தற்போது பணி நடைபெற்று வரும் திட்டத்தில் போலியாக கணக்கு காட்டி ரூபாய் 160 கோடி பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது.

சோதனையின்போது தகவல் தொழில்நுட்பம் சிறப்புப் பொருளாதார மண்டல வடிவமைப்பாளர் வாங்கிய பங்கு பரிவர்த்தனைகள் குறித்தும் தெரியவந்தது. இந்த பங்குகளை விற்றதன் வாயிலாகக் கடந்த 2017-18 நிதி ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு மொரிஷியஸ் நாட்டு இடைத்தரகர் வாயிலாக ரூபாய் 2300 கோடி கிடைத்துள்ளது. எனினும் இந்த விற்பனை வர்த்தகத்தின் வாயிலாக பெறப்பட்ட மூலதன ஆதாயம் குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

எவர்சில்வர் வியாபாரிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின் வாயிலாக அவர் சார்ந்துள்ள குழுமம் மூன்று விதமான விற்பனைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது- கணக்கில் காட்டியது, கணக்கில் காட்டாதது, ஒரு பகுதியையே கணக்கில் காட்டியது.கணக்கில் காட்டப்படாத மற்றும் ஒரு பகுதியை கணக்கில் காட்டிய விற்பனைகள் மூலம் ஒவ்வொரு வருடமும் 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகைக்கு விற்பனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த குழுமம் விற்பனை சார்ந்த ரசீதுகளை பல்வேறு நுகர்வோருக்கு அளித்திருப்பதும், அதன் வாயிலாக 10 சதவீத தரகுத் தொகை பெறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பாக தற்போது ஆய்வு செய்து வருகையில் இது சுமார் ரூபாய் 100 கோடி அளவிற்கு இருக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுமங்கள், கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள், முதல்/ கடன்களின் வாயிலாக ரூபாய் 50 கோடி மதிப்பில் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.இதுவரை நடைபெற்ற சோதனைகளின் மூலம் ரூபாய் 450 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.