தனியார் வாகனங்களில் அரசு சின்னங்கள் – அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Scroll Down To Discover

தனியார் வாகனங்களில் அரசு சின்னம் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அரசு டாக்டரான கிருத்திகா என்பவர் தாக்கல் செய்த மனு:வாகனங்களின் எந்தப் பகுதியிலும், அரசை குறிக்கும் வகையில், ‘ஜி’ என்ற ஸ்டிக்கர் இருக்கக் கூடாது. சிவப்பு வண்ணத்தில், ‘ஜி’ என பெயின்ட்டால் எழுதவும் கூடாது. ஆனால், ‘கவர்மென்ட் ஆப் இந்தியா’ அல்லது ‘கவர்மென்ட் ஆப் தமிழ்நாடு’ என்று வாகனங்களில் எழுதி கொள்கின்றனர். அரசு சின்னத்தை, வாகனத்தின் பின்னால் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அரசை குறிக்கும் வகையில்,’ ஜி’ என எழுதி, சுய முக்கியத்துவம் கொடுத்து கொள்கின்றனர். பொது மக்களையும் ஏமாற்றுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், செயல்பட முடியாமல் உள்ளனர். நடவடிக்கை எடுக்க சட்டம், விதிகள் இருந்தும், அதை அமல்படுத்துவது இல்லை.எனவே, தனியார் வாகனங்களில், மத்திய, மாநில அரசுகளை குறிக்கும் வகையிலான ‘ஜி’, ‘ஐகோர்ட்’, ‘போலீஸ்’ என ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, இந்த விவகாரத்தில் விரிவான உத்தரவை, உயர் நீதிமன்றம் பிறப்பித்திருப்பதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை அளிக்க, அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, வரும் 20க்கு தள்ளி வைத்தது.