தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புடன் தொடர்பா..? தமிழகத்தில் 11 இடங்களில் NIA அதிரடி சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

Scroll Down To Discover

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் காட்டப்படாத பணம், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் இன்று காலை 11 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக சென்னையில் சித்தலபாக்கம், வண்டலூர், வெட்டுவாங்கனி, திருவல்லிக்கேனி, ஏழுகிணறு, ராயப்பேட்டை, மற்றும் கன்னியாகுமரி என மொத்தம் 11 இடங்களில் சோதனை நடைபெற்றது.

அந்தவகையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட “ஹிஸ்புத் தஹ்ரிர்” என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர். டாக்டர் ஹமீது உசேன், அவருடைய அப்பா மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய 6 பேரையும் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. தரப்பில் மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளது.. மேலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை 11 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.