தஞ்சை விமானப்படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்கேஐ ரக விமானங்கள் இணைப்பு..!

Scroll Down To Discover

தஞ்சை விமானப்படை தளம் 8 விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை உடன் நிரந்தர விமானப்படைத்தளமாக இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் அங்கு சுகோய் போர் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. தற்போது தென்னிந்திய பாதுகாப்பிற்காக இந்த படைத்தளத்தில் சுகோய் 30 எம்கேஐ ரக விமானம் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்காக விமானப்படை தள மைதானத்தில் நடந்த விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.பதோரியா, தஞ்சை விமான படை அதிகாரி பிரஜோல்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானம் தஞ்சை படை தளத்தில் இணைக்கப்பட்டதன் மூலம் இந்த வகை போர் விமானம் உள்ள தென்னிந்தியாவின் முதல் படைதளம் என்ற பெருமையை தஞ்சை பெற்றுள்ளது.

இந்திய விமானப்படையில் இருக்கும் அதிநவீன ரக போர் விமானமான சுகோய் 30 எம்கேஐ, வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்குவதுடன், வானில் இருந்து தரையிலும் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் எச்ஏஎல் நிறுவனம் தற்போது இவற்றை தயாரித்து விமானப்படைக்கு வழங்குகின்றது. 2002ல் முதல் முறையாக இவை விமானப்படையில் இணைக்கப்பட்டன.இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,120 கிமீ மற்றும் இதன் அதிகபட்ச எடை தாங்கும் திறன் 38,000 கிலோவாக உள்ளது. இவற்றில் ராடார் முதல் ராக்கெட்கள் வரை எடுத்துச் செல்ல முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்தியப்பெருங்கடல் மற்றும் தீபகற்ப பிரதேசத்தின் புவி அரசியல், முக்கியத்துவம் அதிகரித்து வரும் பின்னணியில், தஞ்சாவூர் விமானபடைத்தளம் முக்கிய இடத்தை பெறுகிறது. கடற்கொள்ளை, பயங்கரவாத அச்சுறுத்தலை எந்த நேரமும் எதிர்கொள்ள இந்த தளம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் கண்காணிப்பு பணிக்கு வீரர்கள் செல்ல இந்த விமான தளம் உறுதுணையாக உள்ளது.

முன்னதாக சுகோய் – 30 ரக போர் விமானம் விமானப்படை தளத்துக்கு வந்தபோது அதற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/5gdPcl9ASfo

இந்த விழாவில் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்:- முப்படைகளுடன் இந்த படைப் பிரிவை இணைப்பதால் எதிர்காலத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக மாறும். பாதுகாப்பு துறையில் இது மிகப் பெரிய மாற்றம். முதல் முறையாக பிரம்மோஸ் ஏவுகணை இந்த விமானத்தில் பொருத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த முயற்சி நடந்து தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.