முதல் முறையாக டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த பெண் நியமனம்..!

Scroll Down To Discover

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) துணை வேந்தராக எம். ஜெகதீஷ் குமார் இருந்து வந்தார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்தது. எனினும் தொடர்ந்து அவர் துணை வேந்தர் பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவராக ஜெகதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட்டை ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் நேற்று நியமித்துள்ளது. அரசின் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு பெண் துணை வேந்தர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ, மகாராஷ்டிராவில் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை பேராசிரியாக இருந்து வருகின்றார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான் எம்பில் மற்றும் பிஎச்டி முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துணை வேந்தராக பணியாற்ற வாய்ப்பு அளித்த பிரதமருக்கும், கல்வி மந்திரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தை சேர்ந்த என்னை டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக நியமித்தது மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.ஹ்