டெல்லி சிஏஏ-வுக்கு எதிரான வன்முறையில் பலியான ரத்தன்லால் மனைவிக்கு அமித்ஷா இரங்கல் கடிதம்

Scroll Down To Discover

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடைபெற்றதை அடுத்து இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதைத் தொடர்ந்து மெளஜ்பூர், கர்தம்பூரி, சந்த் பாக், தயால்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களின் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்றும் வன்முறை நடைபெற்றது. இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மெளஜ்பூர் வன்முறையில் ஈடுபட்ட ஒருவர் துப்பாக்கியால் சுட்ட காட்சி வெளியானது. இந்தக் காட்சியைக் கொண்டு 33 வயதான ஷாரூக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் வன்முறையில் வீடுகள், பெட்ரோல் பங்க் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், தீயை அணைக்க வந்த வாகனம் ஒன்றின் மீதும் தீ வைத்தனர்.இரவிலும் ஆங்காங்கே கல்வீச்சும், வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் தொடர்ந்தன. டெல்லி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.


இந்த வன்முறையில் கர்தம்பூரி தலைமைக் காவலர் ரத்தன் லால், ஜாஃபராபாத்தை சேர்ந்த முகமது சுல்தான், ஷாஹித் ஆல்வி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சதாரா துணை ஆணையர் அமித் ஷர்மா, கோகுல்பூரி கூடுதல் காவல் ஆணையர் அனுஜ் குமார், இரு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் 11 காவலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து, வடகிழக்கு டெல்லியின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறையில் பலியான போலீஸ்காரர் ரத்தன்லால் மனைவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் கடிதம் எழுதி உள்ளார். இதில் உங்கள் கணவர் அகால மரணமடைந்ததற்கு உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார் உள்துறை அமைச்சர்.